Header Ads

அரசியலுக்கு வர முடியவில்லை ரசிகர்களிடம் ரஜினி மன்னிப்பு!

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் வரும் 31-ஆம் தேதி அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் அவர் கட்சியை ஆரம்பிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் எப்போதும்போல் தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் தொடரும் என்றும் அவர் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்ற எதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி பிரச்சாரத்துக்கு சென்று ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போது கொரோனா வைரஸ் உருமாறி இருக்கும் இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கின்றது. தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை முழு செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்றும் நான் உண்மையை பேச என்றும் தயங்கியது இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.