Header Ads

தமிழர்கள் எவ்வாறு இணைந்து வாழ முடியும்? – சிறிதரன் எம்.பி. ஆவேசம்



 கொலைகார ஜனாதிபதியின் கீழ், ஜனநாயகம் தழைக்குமா? ஹரினையே கொல்வேன் என்கிறவரின் கீழ், எவ்வாறு தமிழர்கள் வாழ முடியும். எனவே, அவர்களுடன் சேர்ந்து தமிழர்கள் வாழ்வதா, இல்லையா என்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் காணிகள் அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன’ என்றார். ‘அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுப்பதற்கு நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதையும் மீறி திங்கட்கிழமை (18), இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இராணுவத்தினர் புடைசூழச் சென்று, அகழ்வாராய்ச்சியை முன்னெடுப்பதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

‘ரஞ்சன் விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றால், குருந்தூர் மலையில் நடந்தது என்ன? தமிழர் பிரதேசத்துக்கு ஒரு சட்டம், சிங்களப் பிரதேசங்களுக்கு ஒரு சட்டமா? எனக் கேட்ட அவர், இவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்றார்.

‘குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டுமென்றால், செங்கல் கற்களை அங்கு ஏன் கொண்டு சென்று இறக்க வேண்டும்? புத்தர் சிலையை அங்கு ஏன் நாட்ட வேண்டும்?, இராணுவத்தினரை ஏன் குவிக்க வேண்டும்? எனக்கேட்டார்.

அநுராதபுரத்தில் சிவன் கோவிலுக்குச் சொந்தமான தமிழர் காணிகள் உள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால், அங்கு தமிழர்களைக் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்.

அத்துடன், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான ‘தொண்டீஸ்வரம்’ அடியோடு அழிந்து விட்டது. அதை ஆய்வு செய்ய யார் வருவார்கள் எனவும், அவர் வினவினார்.

குருந்தூர் மலையில் இடம்பெற்றது வெளிப்படையான இன அழிப்பாகும் எனவும் கூறினார்.

‘அத்துடன், பிரபாகரனைத் தானே சுட்டு, இழுத்துக் கொண்டு வந்து போட்டதாக, ஜனாதிபதியே வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். அவரது இந்தக் கருத்தைச் சாட்சியாகக் கொண்டு, ஏன் சர்வதேசத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது?

‘கொலைகார ஜனாதிபதியின் கீழ், ஜனநாயகம் தழைக்குமா? ஹரினையே கொல்வேன் என்கிறவரின் கீழ், எவ்வாறு தமிழர்கள் வாழமுடியும். எனவே, அவர்களுடன் சேர்ந்து தமிழர்கள் வாழ்வதா, இல்லையா என்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ எனவும், சிறிதரன் கூறினார்.

No comments

Powered by Blogger.